பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி 25 மாவட்டங்களிலும் பொதுமக்களின் கையெழுத்து பெறும் அடையாள ஊர்திவழி போராட்டம் நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று அம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஆகியோரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவான், சி.வீ.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கி. சேயோன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஊர்திவழிப் போராட்டம் மூலம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தை சேகரிக்கவுள்ளதுடன்
தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.