அடுத்த வருடத்திற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பே இந்த முடிவிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
சுற்றறிக்கை ஒன்றின் மூலம், புதிய அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்யக் கூடாது என்றும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவுகள், நிதி அமைச்சக செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உட்பட்டவர்கள், அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2022 – 2025 காலப்பகுதிக்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது கடினமாக இருக்கும் என்றும் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாத்தல், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல், அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையை புத்துயிர் பெறுதல் போன்ற அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கு முன்னுரிமை இருந்தாலும், அதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
எனவே செலவினங்களைக் குறைப்பதற்கும் அரச சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என செயலாளர், தமது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.