இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மனித உரிமைகள் குழு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆகியவை இலங்கையில் தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளன.
இந்த பிரச்சினையில் ஒரு அவசர மற்றும் உடனடி தீர்வு தேவைப்படுகிறது என்று இந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகளின் நிலைப்பாட்டை தாங்களும பகிர்ந்து கொள்வதாக அந்த அமைப்புக்கள் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீளவும் கொண்டு வருதல், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டம், பயன்படுத்துவதை நிறுத்துதல் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்புக்கள் இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளன.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவை கேட்டுள்ளன.
இதேவேளை இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட நிதியுதவி ஒப்பந்தங்களில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை இருப்பதை உறுதி செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு, இந்த மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன