வெறும் 25 நாட்களுக்குள் நாட்டில் காணப்பட்ட சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாங்கள் மிகவும் சரியான முறையிலும் ஒரு ஒழுங்கு முறையுடனும் செயற்பட்டதன் காரணமாகவே இதற்கான தீர்வை காண முடிந்தது. நிறுவனம் என்ற ரீதியில் நாங்கள் பல சவால்களை வெற்றிக்கொண்டுள்ளோம்.
சமையல் எரிவாயு இறக்குமதி தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்திலும் உலக வங்கியினூடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி லிட்ரோ நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கின்றேன்.
சர்வதேசத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது அனைத்து நடவடிக்கைகளும் அரச திறைசேரியின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவதால் எதிர்காலத்தில் உலக வங்கியிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
அத்துடன் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு லிட்ரோ நிறுவனத்தின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கான நெருக்கடி நிலை நிலவிய சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கியால் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.
குறித்த நிதியை அரசாங்கம் மற்றும் லிட்ரோ நிறுவனம் மோசடி செய்ததாக சில அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.