மாத்தறை-திக்வெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பத்தேகம நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் இன்று காலை திக்வெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்குச் சென்றபோது, காரில் வந்த இரு சந்தேகநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம வெளியேறும் பாதையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பத்தேகமையில் இருந்து வெளியேறிய காரின் பின் இருக்கையில் பெண் ஒருவர், பலவந்தமாக கடத்தி செல்லப்படுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் பத்தேகம போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பத்தேகம நகருக்கு அருகில் காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் காரின் கதவுகளை பூட்டியிருந்த நிலையில், குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரையும் பெண்ணையும் வெளியேற்ற, கதவுகளின் கண்ணாடியை உடைப்பதற்கு முன்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணும் சந்தேக நபரும் வெட்டுக் காயங்கள் காரணமாக சிகிச்சைக்காக பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதி வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.