
சர்வதேச ஜனநாயக நாள் இன்று நினைவுக்கூரப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகத்திற்கான செய்தித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது சர்வதேச ஜனநாயக தினத்தின் 2022 இன் கருப்பொருளாகும் என்று ஐக்கிய நாடுகளின் கல்வி அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
சுதந்திரமான செய்தித்துறை, ஜனநாயகம் இல்லாமல் வாழ முடியாது. கருத்து சுதந்திரம் இல்லாமல், சுதந்திரம் இல்லை. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இணைவோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் உலக மக்கள் தொகையில் 85 சதவீதமானோர் தங்கள் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்துள்ளதாக உணர்வதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலகளவில் ஊடகங்கள் அதிகளவில் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன, அதிகரித்து வரும் தடுப்புக்காவல், அவதூறு சட்டங்கள் போன்றவை ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு இடையூறாக உள்ளன.
செய்தியாளர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் நாளுக்கு நாள் வெட்கக்கேடான வகையில் அதிகரித்து வருகின்றன. மேலும் அவர்கள் பெரும்பாலும் இறுதி விலையாக உயிரை கொடுக்கின்றார்கள். 2016 முதல் 2021 இறுதி வரை, உலகில் 455 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பணிகளின் போதே மரணமாகியுள்ளனர்.