சானிட்டரி நாப்கின்களின் அதிகரித்த விலை காரணமாக, கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண் மாணவிகளின் வருகை கடுமையாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சானிட்டரி நாப்கின்களின் விலை உயர்வால், கிராமப்புறங்களில் மாணவிகள் பாடசாலைக்கு வருவதில்லை என எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன. இது மிகவும் வருத்தமான நிலை.
அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் ஆரோக்கியம் தொடர்பில் சுகாதாரத் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை மற்றும் பதுளை பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருவதால் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.