ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள்தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணி ஓய்வு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைநேற்று முன்தினம் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில், 60 வயது பூர்த்தியாகும் 1,282 அதிகாரிகள் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு தர நிலை பதவிகளை வகிப்பவர்கள் இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வு பட்டியலில், இரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 8 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 17 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், 21 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், 35 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குவதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.