
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.