சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் அதனை நம்பியதன் காரணமாக அவர்களின் ஆதரவுடன் தான் நாட்டின் அதிபராக வர முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்துக்கான முடிவுகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களை கைப்பற்றுவதன் மூலமோ அல்லது அரசியல்வாதிகளின் வீடுகளை எரிப்பதன் மூலமோ தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், ஆர்ப்பாட்டக்காரர்களையும் சாதாரண மக்களையும் கைது செய்வதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா என அதிபரிடம் ஊடகவியலாளர் வினவியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டவர்கள் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் மற்றும் சட்டத்தை மீறியவர்கள், அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல என அதிபர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அமைய அல்லாமல் காவல்துறை ஊடாகவே அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வசந்த முதலிகே உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளருக்கு பதிலளித்த அதிபர் நீங்கள் சிறுபான்மையினரின் சார்பில் கேள்வி எழுப்பினாலும் பெரும்பான்மை மக்களின் சார்பில் தான் பதில் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான மக்களின் நலனுக்காகவே தானும் அரசாங்கமும் அனைத்து தீர்மானங்களையும் எடுப்பதாக ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.