மட்டக்களப்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் அருகாமையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை, கடமையை செய்ய விடாது இடையூறு செய்த நபர்ரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பாடசாலைகளுக்கு முன்னால் வீதி பாதசாரி கடவைகளில் காலை 6.30 தொடக்கம் 8.00 மணிவரையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுவருவது வழக்கம்.
இந்த நிலையில் நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் வீதியில் சம்பவதினமான நேற்று காலை பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலைக்கு ஏற்றி வந்த நபரொருவர் பொலிஸாரின் சமிஞ்சையை மீறி வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.
கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பெலிஸார் சமிஞ்சையை மீறி சென்ற நபரை தடுத்து நிறுத்திய போது பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு கடமையை செய்யவிடாது இடையூறு விளைவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து இடையூறு விளைவித்த நபரை கைது செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.