ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
“அகதிகளுக்கு விடுதலை”, “அனைவருக்கும் நிரந்தர விசாக்களை வழங்குக”, “அகதிகள் குடும்பத்தினரை மீண்டும் இணையுங்கள்” உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவில் 19 ஆயிரம் பேர் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது சேவ் ஹெவன் எண்டர்பிரைஸ் (Save Haven Enterprise) விசாக்களில் உள்ளனர் என அகதிகள் செயல்பாட்டாளரான பேச்சாளர் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“10 ஆயிரம் பேர் விசா மறுக்கப்பட்டு மற்றும் ஆபத்தான இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் அன்று இரவு தற்போதைய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தொழிற்கட்சி ஆட்சியின் கீழ் யாரும் கைவிடப்பட்ட மாட்டார்கள் என்றார். ஆனால் தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் கைவிடப்பட்டு இருக்கின்றனர்.
இன்னும் 200 அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா தீவில் உள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள ஐ.நா.வின் பதிவின் கீழ் இருக்கும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட முந்தைய ஆட்சியின் தடை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது.”என தெரிவித்துள்ளார்.