இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பொருட்களின் விலைகளும் பாரியளவில் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் படுமோசமான நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், போதியளவு கிடைக்காமை காரணமாக விவசாய துறை, கடற்றொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் எரிபொருள் கப்பல்கள் டொலர் இல்லாத நிலையில் பல நாட்களாக கடலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கடந்த 23ஆம் திகதி நாட்டிற்கு வந்த மசகு எண்ணெய் கப்பல் இவ்வாறு இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவே மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக்கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக நாட்டின் டொலர் கையிருப்பு விரயம் செய்யப்படுவதாக கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அசோக்க ரன்வல குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளது. முறையான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாமை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அசோக்க ரன்வல தெரிவித்துள்ளார்.