
உள்ளூராட்சி தேர்தலை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தமது ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் 2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டு, தேர்தலை அடுத்த வருடம் மார்ச் வரை ஒத்தி வைப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.