
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.