நேற்று 21/09/2022 பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியத்துறையில் மிகவும் தீவிரமான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது. வைத்திய நிபுணர் ஒருவர் உருவாவதற்கு ஆகக் குறைந்தது 12 வருடங்களாவது தேவைப்படுகின்றது.
2018 ஓகஸ்ட் மாதம் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஓய்வுபெறும் வயதெல்லை 63ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஓய்வுபெறம் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் ஓய்வுபெறும் வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டு அதன் பின்பு செப்டெம்பர் 1ஆம் திகதி அந்த வயதெல்லையை மீளவும் 63 ஆக மாற்றியுள்ளனர்.
செப்டெம்பர் 14அம் திகதி மீளவும் 60ஆக மாற்றியுள்ளனர். இவ்வருடத்தின் இறுதியில் டிசெம்பர் 31ஆம் திகதியாகும்போது ஒரு நாளில் வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர். இதனை மறுப்பதற்கு முடியாது. இதுவே உண்மை நிலைமை நிலவரம்.
இதன் காரணமாக சுகாதாரத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். நான் இவ்விடத்தில் உதாரணமாக ஒருவிடயத்தை கூறவிரும்புகின்றேன்.
இரத்தமாற்று சிகிச்சை நிபுணர்கள் 33 பேர் உள்ளனர். இவர்களில் 08 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். இருவர் தற்போது ஓய்வுபெறவுள்ளனர். ஐந்து பேர் நாட்டைவிட்டு சென்றுள்ளனர். மேலும் நான்கு பேர் நாட்டை விட்டு செல்வதற்கு தயாராக உள்ளனர். எனவே இரத்தமாற்று சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையில் 14 பேர் குறைவடைய போகின்றனர்.
எலும்பு மச்சை சிகிச்சைக்கு இரத்தமாற்ற சிகிச்சை நிபுணர்கள் அவசியப்படுகின்றனர். தற்போதைய நிலையில் வைத்தியசாலைகளில் 2025 நோயாளர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். எனவே இவ்வாறு 14 வைத்திய நிபுணர்கள் குறையும்போது காத்திருப்பு பட்டியலில் இருப்போருக்கு என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.