ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் நேற்று அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டெண்டரின்படி பெறப்பட வேண்டிய நிலக்கரி இருப்புக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருட டெண்டரில் இருந்து மீதியான 19 சரக்குகள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இது நாட்டை மீண்டும் மின்சார நெருக்கடிக்குள் தள்ளக்கூடும். ஒக்டோபர் 28ஆம் திகதி வரை போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அடுத்த சில நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால், இலங்கையில் தினசரி10 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.