திலீபன் நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்து விட்டன. 1987 ம் ஆண்டு புரட்டாதி 15 ம் திகதி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து புரட்டாதி 26 ம் திகதி மரணமடைந்தார். திலீபன் நினைவு நாட்கள் இந்த 12 நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றன. இறுதி நாளில் நினைவுகூரல் பெரிதாக இடம் பெறும். புலிகள் இயக்கம் இருக்கும் வரை நினைவு நாட்களை அனுஸ்டிப்பதில் எந்த முரண்பாடுகளும் இருக்கவில்லை. புலிகள் இயக்கமே அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு அதனை நடாத்தி வந்தது.
2009 ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நினைவு கூரலை யார் நடாத்துவது என்பது தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளன.
தேர்தலை மையமாக வைத்த கட்சி அரசியலும் இதற்குள் நுழைந்து செயற்படுகின்றது. நினைவுகூரல் தொடர்பான பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என உரையாடல்கள் இடம்பெற்ற போதும் அது வெற்றியைத்தரவில்லை. நினைவுகூரல் நாட்கள் வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்னர் தான் இவை பற்றி உரையாடல்கள் இடம் பெறுகின்றனவே தவிர முன்கூட்டியே இதற்கான முயற்சிகள் இடம் பெறுவதில்லை.
அனைத்து நினைவு கூரல்களுக்குமான பொதுக்கட்டமைப்பை உருவாக்கி அதன் கீழ் உப குழுக்கள் மூலம் பல்வேறு நினைவுகூரல்களையும் மேற்கொள்ளலாம் என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
தவிர பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்தினால் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் , திலீபன் நினைவு கூரல் , என்பன பெரிதாக அனுஸ்டிக்கப்படுகின்றதே தவிர நாகர் கோவில் படுகொலைகள் , நவாலி படுகொலைகள் , கிரிசாந்தி படுகொலை என்பன பெரிதளவிற்கு கவனிக்கப்படுவதில்லை.
திலீபன் நினைவு கூரலும் அன்னை பூபதியின் நினைவுகூரலும் முக்கியமானவை. இருவரும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர்கள். இதற்காக ஏனைய நினைவு கூரல்கள் குறைந்தவை என அர்த்தமல்ல.
நினைவு கூரல்கள் பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதில் முதலாவது தமிழ் மக்கள் ஒரு தனியான தேசமாக ஒன்று திரளலை அது வெளிக்காட்டுகின்றது.
இனப்பிரச்சினை தீரும் வரை தமிழ் மக்கள் ஒரு இலக்கின் அடிப்படையில் தேசமாக ஒன்று திரண்டு நிற்கின்றனர் எனக் காட்டுவது அவசியம். நினைவு கூரல்களைப் பேரெழுச்சியாக அனுஸ்டிப்பதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரண்டு நிற்கின்றனர் என்பதை வெளிப்படுத்த முடியும். வெறுமனே அடையாள நினைவு கூரல்கள் தேச எழுச்சியை பெரியளவிற்கு வெளிப்படுத்தாது. குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் படுகொலை திலீபன் நினைவு தினம் , அன்னை பூபதி நினைவு தினம் , மாவீரர் தினம் என்பவற்றை பேரெழுச்சியாக அனுஸ்டிப்பது அவசியமானதாகும். நினைவு கூரல்களை அனுஸ்டிப்பதில் கட்சி அரசியலை நுழைய விட்டால் பேரெழுச்சி ஒரு போதும் ஏற்படாது. இரண்டாவது நினைவு கூரல்கள் தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றை கடத்தும் கருவிகளாக உள்ளன. தமிழ் மக்களை ஒரு தேசமாக தொடர்ச்சியாக பேணுவதற்கு புதிய தலைமுறைகளுக்கு வரலாற்றைக் கடத்திக் கொண்டிருப்பது அவசியமாகும்.
தமிழ் மக்கள் ஒரு அரசற்ற சமூகமாக இருப்பதால் வரலாற்றைக் கடத்தும் முயற்சிகளுக்கு ஒடுக்கும் சிறீலங்கா அரசு ஒரு போதும் ஒத்துழைப்புக்களைத் தராது. எனவே இந்த வரலாற்றைக் கடத்தும் முயற்சிகளைத் தமிழ் மக்களே முன்னெடுக்க வேண்டும். இது பற்றி நூல்களை வெளியிடுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.
மூன்றாவது நினைவு கூரல்கள் தமிழ்தேசிய அரசியலை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு உதவுகின்றன. இனப்பிரச்சினை தீரும் வரை தமிழ்த்தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியம். தமிழ்த்தேசியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை தான் தேசமாக ஒருங்கிணைதலும் சாத்தியமாகும். அரசியல் செயல்பாடுகளை மைய இலக்கிலிருந்து நகரவிடாமல் பாதுகாக்கவும் முடியும்.
நான்காவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல்களை நினைவு கூரல்கள் வழங்குகின்றன. இந்த உள ஆற்றுப்படுத்தல்களுக்காகத் தான் முன்னவர்களின் திதி தினங்களை நம்மவர்கள் அனுஸ்டித்து வருகின்றனர். உள ஆற்றுப்படுத்தலுக்கு மதச்சடங்ககுகள் உதவுவது போல அரசியல் சார்ந்த நினைவு கூரல் நிகழ்வுகளும் உதவுகின்றன.
மேலே கூறிய முக்கியத்துவத்தை சீராக பேண வேண்டுமாயின் நினைவுகூரல்களுக்கு ஒரு பொதுக்கட்டமைப்பு அவசியமாக இருந்தது.
முன்னர் கூறியது போல பொதுக்கட்டமைப்பு தொடர்பாக நீண்டகாலமாக உரையாடல் இருந்த போதும் அதை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு தொடர்ச்சியாக இடைஞ்சல்களே ஏற்பட்டன. தேர்தல் அரசியல் , குழு அரசியல் என்பவையும் தடையாக விளங்கின.
இந்த பொதுக்கட்டமைப்பு தேர்தல்மைய கட்சி அரசியலுக்கு அப்பால் உருவாக்கப்படவேண்டிய தேவையும் இருந்தது. பொதுவாக முள்ளிவாய்க்கால் நினைவு கூரலை அடிப்படையாகக் கொண்டே பொதுக்கட்டமைப்பு விவகாரம் அதிகம் பேசப்பட்டது.
அங்கு ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்களை மட்டும் கொண்டதாக இருந்ததே தவிர தமிழர் தாயகம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கவில்லை. தாயகம் முழுவதற்குமான பொதுக்கட்டமைப்பை உருவாக்கி அதன் ஒரு உப குழுவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவை உருவாக்கியிருக்கலாம்.
கடந்த 15ம் திகதி திலீபனின் நினைவுகூரல் ஆரம்ப நாளன்று திலீபன் நினைவுகூரலை நடாத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும், மணிவண்ணன் குழுவினருக்குமிடையே திலீபன் நினைவுத்தூபிக்கு முன்னால் மோதல் ஏற்பட்டது. கடும் வாக்குவாதங்களும் தள்ளுப்படுகைகளும் இடம்பெற்றன. வலைத்தளங்களும, தொலைக்காட்சிகளும் அந்த மோதல் நிகழ்வை மீள மீள காட்டிக்கொண்டிருந்தன. போட்டி அரசியல் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். இந்த மோதலை காட்சி ஊடகங்களினூடாக பார்த்த மக்கள் கடும் விரக்தியும் வெறுப்பும் அடைந்தனர்.
தமிழீழத்தை இவர்களிடம் கொடுத்தால் இதுதான் நடக்கும் என்றும் விரக்தியுடன் பேசினர்.
இந்த மோதலின் பின்னர் பொதுக் கட்டமைப்பின் அவசியம் மேலும் உணரப்பட்டது. இதனடிப்படையில் 17ம் திகதி நாவலர் மண்டபத்தில் யாழ்நகர மேஜர் மணிவண்ணன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், பொது அமைப்புகளுக்கும், சமூக முக்கியஸ்தர்களுக்கும் இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சிப் பிரமுகர்கள் என்ற வகையில் ஐங்கரநேசனும், சிவாஜிலிங்கமும் மட்டுமே கலந்துகொண்டனர். சிறீதரன், விக்கினேஸ்வரன், அனந்தி ஆகியோர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். மணிவண்ணன் தலைமையுரையில் திலீபன் நினைவுத் தூபி மாநகரசபையின் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் இருப்பதாலும், வேறு எவரும் முன்னெடுக்காததினாலும் தான் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் வேறு நோக்கங்கள் எதுவும் தனக்கு இல்லையென்றும் சபையினர் சுதந்திரமாக விவாதித்து பொதுக் கட்டமைப்பை தெரிவுசெய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
சபையினர் கருத்து தெரிவிக்கும் போது பொதுக் கட்டமைப்புக்கான குழுவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சேர்ப்பதா? இல்லையா? என்பது முக்கிய விவாதமாக இருந்தது. மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்து பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது நல்லது என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தார். சிவாஜிலிங்கமும், ஐங்கரநேசனும் குழுவில் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சேர்ப்பது அவசியமில்லை. நாங்கள் பின்னால் ஆதரவாக நிற்போம் என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தனர். வேண்டுமானால் பொதுக் கட்டமைப்பு குழுவுக்கு புறம்பாக ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்போம். அதில் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கலாம் என்ற அபிப்பிராயத்தை சிவாஜிலிங்கம் வெளியிட்டார். பாதுகாப்புப் பிரச்சினை வருமானால் நாம் நிச்சயம் அரணாக நிற்போம் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியர் கணேசலிங்கம் அரசியல் கட்சி சாராதவர்களைக் கொண்டே பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாறாக கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்து உருவாக்கப்படுமாக இருந்தால் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் நான் விலகிவிடுவேன் என்றும் குறிப்பிட்டார். இக் கட்டுரையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மதத் தலைவர்கள், என்போரை உள்ளடக்கி பொதுக்கட்டமைப்பபை உருவாக்கலாம் என்றும் பாதுகாப்புப் பிரச்சினையும், மக்களை அணிதிரட்டும் பிரச்சினையும் இருப்பதால் அரசியல் கட்சிகளை ஒதுக்காமல் பொதுக்கட்டமைப்புக்குப் புறம்பாக கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக்குழு ஒன்றை உருவாக்கலாம் என்றும் அபிப்பிராயத்தை முன்வைத்தார்.
திலீபன் நினைவுகூரல்களுக்கு மட்டுமல்ல அனைத்து நினைவுகூரல்களுக்குமான பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டு மென்றும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுக் கட்டமைப்பில் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டுமென்றும் சபையினர் ஏகமனதாக முன்வைத்தனர். இறுதியில் 7 பேரைக் கொண்ட தற்காலிக குழு உருவாக்கப்பட்டது. மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும், வேறு முக்கியஸ்தர்களையும் இணைத்து குழுவை மீளுருவாக்கம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
7 பேர் கொண்ட குழுவில் மூத்த போராளியும் மாவீரரின் தந்தையுமான காக்கா அண்ணர், யாழ் பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவர், மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன், இக் கட்டுரையாளர் உட்பட வேறு போராளிகளும் அங்கம் வகித்தனர். இக் கட்டுரையாளர் வேறு பல பணிகளைச் செய்வதால் குழுவில் அங்கம் வகிப்பதை விரும்பவில்லை. ஆனாலும் மூத்த போராளி காக்கா அண்ணரின் வேண்டுகோளுக்காகவும், அவர் பிரேரரித்ததினாலும் குழுவில் அங்கம் வகிக்க சம்மதித்தார்.
19ம் திகதி பொதுக் கட்டமைப்புக் குழுவை மீளுருவாக்கம் செய்வதற்காகவும் முன்னரே தீர்மானித்தபடி மதகுருமார்களையும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும், இணைத்துக்கொள்வதற்காகவும் நல்லை ஆதீனத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. நல்லை ஆதீன குரு தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் அருட்திரு வேலன் சுவாமிகள், கத்தோலிக்க குரு முதல்வர் ஜெபரட்னம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட கட்சிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வடமாகாண சாநாயகர் சிவஞானமும் கலந்துகொண்டார். கூட்டத்தில் 15பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. முன்னைய குழுவில் அங்கம் வகித்தவர்கள் உட்பட மூன்று மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் என்போரும் இணைக்கப்பட்டனர். பெண் முன்னாள் போராளி ஒருவரை இணைக்கவேண்டும் என்பதற்காக கஜந்தினி இணைக்கப்பட்டார். முன்னைய குழுவில் இருந்த மாநகரசபை உறுப்பினர் ஒரு அரசியல் அணியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத் தவிர்ப்பது நல்லது என்ற அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டது. அதற்கிணங்க அவர் தவிர்க்கப்பட்டார்.
நிலவரத்தை அவருக்கு விளக்கியபோது அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 15பேர் கொண்ட குழு செயற்பாடு களை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக்குழுவுக்கான எதிர்வினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து சகல வழிகளிலும் வெளிப்பட்டது. வலைத்தளங்களில் குழுவைப்பற்றிய வசைபாடல்கள் வெளிவந்தன. இந்த வசைபாடலுக்கு மூத்த போராளி காக்கா அண்ணர், வேலன் சுவாமிகள், குரு முதல்வர் ஜெபரத்தினம், இக் கட்டுரையாளர் எவரும் விதிவிலக்காக இருக்கவில்லை.
அடுத்தநாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பொன்மாஸ்டர் தலைமையில் திலீபனின் நினைவுத்தூபி முன்னால் ஒரு ஊடக மாநாட்டை நடாத்தினர். அதில் திலீபன் நினைவுகூரல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தமக்கே உரிமையுண்டு என்றும், 15 பேர் கொண்ட குழுவை தாம் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டனர். குழுவில் உள்ளோர் பற்றி வசைபாடல்களையும் முன்வைத்தனர். இனிவரும் நாட்களில் மோதல்கள் மேலும் தீவிரமடையலாம்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இந் நினைவுகூரலை முன்கையெடுத்து ஆரம்பித்தது என்பதையும் மறுக்க முடியாது.
பொத்துவிலிலிருந்து யாழ்ப்பாணம் வரையான திலீபன் ஊர்வலப் பவணி மிகவும் வரவேற்கத்தக்கதே! நினைவுகூரலை ஒட்டி அவ் அமைப்பு நடாத்திய இரத்ததான நிகழ்வும் வரவேற்கத்தக்கதே! நினைவுகூரல் நாட்களில் கட்சி உறுப்பினர்கள் நாள்தோறும் அஞ்சலி செலுத்துவதும் வரவேற்கத்தக்கதே! ஆனாலும் தமிழ் மக்கள் முன்னணி ஒரு அரசியல் கட்சி.இதனால் நினைவுகூரல் நிகழ்வுக்கு கட்சி முகமே வெளியே வரும். இது தேசமாக ஒன்றுதிரளல் என்பதற்கு தடையாக இருக்கும். இன்றைய சூழலில் ஒரு அரசியல் கட்சியினால் அடையாளப் போராட்டங்களை நடத்த முடியுமே , தவிர பேரெழுச்சியை மேற்கொள்ள முடியாது. இன்றைய தேவை பேரெழுச்சிகளே ஒழிய அடையாளப் போராட்டங்கள் அல்ல.
அண்மைக்காலங்களில் பேரெழுச்சி எனக் கூறக் கூடியது “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” போராட்டம் மட்டும்தான்” அதன் வெற்றிக்கு பிரதான காரணம். பொதுத்தரப்பு அதை முன்னெடுத்ததுதான்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இதைப் புரிந்துகொள்வார்களா?