திருகோணமலை -அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து வெளியேற்றி பிரதேச சபைக்குள் உள்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை நகர சபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கையாக சனத்தொகை அதிக அளவில் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
அதன் காரணமாக பிரதேச சபைக்கு உள்ளடக்கப்பட்டுள்ள சில கிராமங்களான சிங்ஹபுர, பாலையூற்று, மட்கோ, லிங்கநகர் போன்ற பகுதிகளை மாநகர சபைக்குள் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திருகோணமலை நகர சபைக்குள் உள்வாங்கப்பட்டிருந்த இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தை கொண்டுள்ள அன்புவழிபுரம் திருகோணமலை நகர சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதேச சபைக்கு நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கையினை அன்புவழிபுரம் சிவில் சமூகம் மற்றும் திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் வன்மையாக எதிர்த்து வருகின்றனர். அதே நேரம் அபயபுர நகர சபைக்குள் இருப்பதைப் போலவே இருக்கின்றது.
ஆனாலும் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் அன்புவழிபுரம் வட்டாரம் மாத்திரம் ஏன் பிரதேச சபைக்குள் நகர்த்தப்படுகின்றது எனவும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருகோணமலை நகர சபை, மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுவதை தமிழ் பேசும் மக்கள் வரவேற்கின்ற அதேவேளை ஏன் தமிழர்கள் செறிந்து வாழும் அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபைக்குள் இருக்கின்ற நிலையில் ஏன் பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படுகின்றது? இவ்வாறான செயற்பாடு தமிழ் பேசும் மக்களை இன்னும் உயரத்தில் ஆழ்த்துவதாக கருதுவதாகவும் சமூக சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.