நாடெங்கிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற முடியாத அளவு இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நேரம் இல்லாமல் வைத்தியர்களும் தாதியர்களும் தத்தளித்து கொண்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தலிபான்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் இலக்கு நோக்கிய பயணமும் அவர்களை இன்று தமது தாய் நாட்டை அடைய வைத்திருக்கின்றது.
தலிபான்களின் விடுதலை என்பது சரியா பிழையா என்பது பிரச்சினையல்ல. சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்கு போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கின்றது. இந்த நாடு மிகப்பெரியதோர் அபாயத்துக்குள் சிக்கியிருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
ஆனால் குருந்தூர் மலையிலே பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று பாரிய விகாரையை அமைக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னாலையில் சிறிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினைக்காக பொன்னாலை இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் சென்று அங்குள்ளவர்களை தாக்கியுள்ளனர்.
இவ்வாறு தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது என்று அங்குள்ளவர்கள் கேட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மத்தியில் ஒரு இராணுவ அச்சம் பிரயோகிக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் கொரோனா உள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சரியான நிவாரணம் சென்றடைவதில்லை.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மீதான விசாரணைகள், நிலப்பறிப்புக்கள், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருக்கின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி கிடைக்கும்? நாங்கள் கேட்பது இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான அடையாளத்துடன் கூடிய தேசிய இனம். 21 ஆம் நூற்றாண்டில் தலிபான் இயக்கம் தன்னுடைய நாட்டை ஆயுத வழியில் வென்றுள்ளது.
நாங்கள் ஆயுதம் பற்றி பேசவில்லை. எமது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் 12 ஆண்டுகள் கடந்து பேசுகின்றோம்.
ஆகவே நாங்கள் கேட்பது ஆயுத ரீதியான போராட்டத்தையல்ல. ஆனால் நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கட்டும் பிரதமராக இருக்கட்டும், சிங்கள தலைவர்களாக இருக்கட்டும்.சற்று சிந்தியுங்கள்.
இன்று உலக ஒழுங்குகள் மாறுகின்றன. உலக சூழல் மாறுகின்றது .எத்தனையோ சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்கு போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கின்றது. தலிபான்களின் விடுதலை என்பது சரியா பிழையா என்பதல்ல. ஆனால் அவர்களினால் முடிந்திருக்கின்றது.
ஒரு பெரிய நாட்டை அவர்களினால் மீட்டெடுக்க முடிந்திருக்கின்றது என்றால் அது ஒரு மாற்றம். இந்த உலக பந்தில் ஏற்பட்டிருக்கின்ற இராணுவ ரீதியிலான, ஆயுத ரீதியிலான ஒரு மாற்றம் என குறிப்பிட்டுள்ளார்.