ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எழுதியுள்ள ஒரு திறந்த மடலிலேயே மருத்துவ நிபுணர்களின் சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மருத்துவ நிபுணர்களின் சங்கத்தினராகிய நாங்கள் கொரோனா வைரஸின் டெல்டா திரிபானது வேகமாகப் பரவுவதால் ஏற்படக்கூடிய அழிவு பற்றி உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை மருத்துவ சங்கம், சுகாதாரப் பரிசோதகர்கள் அத்துடன் மற்றைய அனைத்து சுகாதார சேவை பணியாளர்கள் எல்லோரும் கொண்டுள்ள கருத்தையே கொண்டிருக்கின்றோம்.
விஞ்ஞான, புள்ளிவிபரவியல் மற்றும் கள நிலைமைகளைக் கருத்தில்கொண்டே எங்களது எல்லாவிதமான கவனயீர்ப்புகளும், எச்சரிக்கைகளும் மற்றும் அனுமானங்களும் அமைந்துள்ளன.
ஜனாதிபதியும் அரசும் நோய் பரவலைத் தடுப்பதற்காக விதித்துள்ள பயணத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வரவேற்கும் அதேநேரம், டெல்டா திரிபு வைரஸினுடைய பரம்பல் நிறுத்தப்பட முடியாத பேரழிவு நிலைக்குச் செல்லும் முன்னர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு மீண்டும் ஒரு முறை நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
தெளிவாகத் தெரியக்கூடிய அளவில் நோயாளர்களால் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. நோய் தடுப்புப் பிரிவில் பணியாற்றுபவர்கள் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.
மேலும், பிராணவாயு தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் மிகவும் பயங்கரமான நிலைக்கு அதிகரித்துச் சென்றுள்ளன.
இதனால் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமன்றி மற்றைய நோயாளிகளுக்கும் பொருத்தமான சிகிச்சை அளிப்பதற்கு முடியாத நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. நிலைமையை மேலும் சிக்கலாகும் விதத்தில், கொரோனாவினால் பீடிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சற்று தாமதித்து உள்ளதாகக் கருதப்படக்கூடிய போதிலும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார வழிமுறைகளும் கட்டுப்பாடுகளும் நபர்களுக்கு இடையிலான நோய்ப் பரம்பலைக் குறைக்கும் என்பதை இந்த முக்கியமான தருணத்தில் நாங்கள் நம்புகின்றோம்.
தடுப்பூசிகளின் மூலம் சமுதாயத்தில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை இவ்வாறான கட்டுப்பாடுகள் வேதனை தரக்கூடிய அளவிலான மரணங்களையும் நோய் பரவலையும் குறைக்கும் என கருதுகின்றோம்.
இந்த முக்கியமான தருணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி சரியானதும் கடுமையானதுமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நாங்கள் மிகப்பெரிய பேரழிவுக்கு முகம் கொடுத்து வளங்கள் அனைத்தும் இழந்து நாதியற்ற நிலைக்குச் செல்ல நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தனி நபர்களின் பாதுகாப்பு என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பொறுப்பு வாய்ந்த நிபுணர்களின் அமைப்பு என்ற முறையில் நாங்கள் பல விடயங்களை ஜனாதிபதியாகிய உங்களிடமும் அரசிடமும் மிகவும் கருத்தாழம் மிக்க முறையில் முன்வைத்துள்ளோம்.
அத்துடன் சமய மற்றும் சமூகத் தலைவர்களையும், பொதுமக்களையும் தனியாகவும் கூட்டாகவும் முடிவுகளை எடுத்து கொரோனாப் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், இந்த நாட்டில் உள்ள அனைவரையும் சுய கட்டுப்பாட்டுடன் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தனிநபர்களுக்கு மட்டுமன்றி, நிர்வாகிகளும் உரிமையாளர்களும் முடிவுகளை எடுக்கக்கூடிய திணைக்களங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தங்ககங்கள் என்பவற்றிலும் சுய தனிமைப்படுத்தல் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, பல வர்த்தக சங்கங்கள் கூட்டாக இணைந்து சுயதனிமைப்படுத்தல் முடிவுகளை எடுத்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாக அமையும் என்றாலும் பேரழிவிலிருந்து உயிர்களைக் காப்பதற்கான ஒரேயொரு செயன்முறை சாத்தியமான வழிமுறை கடுமையான சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகும் என்பதை இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் நாங்கள் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றுள்ளது.