வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் கிடைக்காமல் போதல் மற்றும் சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், சுங்கத்தில் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக பொருட்களை அனுப்பும் போது இந்த சம்பவங்கள் பெரும்பாலும் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
எனவே, இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்க பதிவு முகவர் நிறுவனங்களுடன் மாத்திரம் அனுப்புமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.