அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் அலுவலக வளாகத்திற்கு வரும்போது அணிய வேண்டிய ஆடை குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையையும், பெண் ஊழியர்கள் அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் புடவை, ஒசரி அல்லது பொருத்தமான ஆடைகளையும் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கமைய, அலுவலக வளாகத்திற்குள் நுழையும் போது, சில ஊழியர்களுக்கு புடவை அல்லது ஒசரியை மட்டுமே பயன்படுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தரவிட முடியாது.
சேவையின் கண்ணியத்தைப் பாதுகாக்க பொருத்தமான அலுவலக உடைகள் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் இது பணிக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச நிகழ்வுகள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது, தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.