இன்றைய தினம் (28) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக வலயங்களின் கீழ் (CC)உள்ள பகுதிகளில் இன்று காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையான பகுதியினுள் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்றாவது அலகில் நேற்று ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நேற்றைய தினத்தில் மின்வெட்டு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நுரைச்சோலை மின்நிலையத்தின் செயலிழப்பால் தேசிய மின்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலதிக மின்வெட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.