
கொழும்பு- மாலபே, ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரான மகன் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியான தந்தை உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.