கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார். இதனையடுத்து விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு காண்பிக்கப்பட்டதுடன் அந்த இடத்தின் உரிமையாளர் தான் எனவும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், வாடகைக்கு ஒப்புக்கொண்ட பின்னர், மின்னணு பணப்பரிமாற்றம் உட்பட்ட வழிகளில் வைப்பு தொகை அனுப்பி வைக்கப்பட்டதுடன், பணம் செலுத்தியவர்களுக்கு குடியிருப்பிற்கு செல்வதற்கு திகதியும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில காரணங்களுக்காக அந்த திகதி பிற்போடப்பட்டதுடன், பணம் வழங்கியவர்களின் அழைப்புக்கு பதில் வழங்குவதையும் அந்த நபர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் அல்லது வைப்பு தொகை வழங்கு முன்னர் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வாடகைக்கு உள்ளது என்பதை கட்டிட உரிமையாளரிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.