சர்வதேச அரசியல் நிலைமைகள் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்துள்ளது-ஜனாதிபதி

கோவிட் தொற்று நோய் மாத்திரமின்றி உக்ரைன் யுத்தம் காரணமாக உருவாகியுள்ள உலக பொருளாதார ஸ்திரமின்மையின் மோசமான பிரதிபலன்களான உணவு, எரிபொருள் மற்றும் பசளை விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளமை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக அரசியல் நிலைமைகள் இந்த பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமடைய செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் 55வது வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினன்ட் ஆர் மார்கோஸ் ஜூனியர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸ்ஹட்சூகு அசகாவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை குறைத்துள்ளதுடன், இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளில் வசிக்கும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் இலஙகை நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக முன்னர் எப்போதும் இல்லாத வகையில் நிதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சிக்கு இலங்கையின் கடன் உரிமையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உதவார்கள் என எதிர்பார்க்கின்றோம். இலங்கை இந்த ஆழமான மற்றும் அழுத்தமான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை அதிகரித்து வரும் தொழில் வாய்ப்பின்மை மற்றும் கொள்வனவு செய்யும் திறன் குறைதலையும் அனுபவித்து வருகிறது.

எனினும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கம் அறிந்துள்ளது. இதன் காரணமாக சமூக பாதுகாப்புக்காக அதிகளவான நிதியையும் வளங்களையும் ஒதுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin