
மட்டு. மாவட்டத்தில் மாணவர்களின் போஷாக்குதன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் இதனை கட்டுப்படுத்தாவிடின் பாரிய விளைவு ஏற்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. சுகுணண் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
எமது திணைக்களத்தால் மாவட்ட ரீதியில் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களின் போஷாக்கு சம்மந்தமான பரிசோதனை மேற்கொண்ட போது 50%ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போஷாக்கற்ற நிலையில் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர். இது ஒரு ஆபத்தான நிலை.
இதற்குரிய தீர்வு விரைவில் காணப்படாவிட்டால் இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொற்றா நோய்க்கு ஆளாகிட நேரிடும்.
எனவே பாரிய தாக்கம் ஏற்பட முன் கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களின், வறுமைநிலையை போக்கி போஷாக்கு தன்மையை உறுதிப்படுத்துவதற்கான பல செயற்றிட்டம் பிரதேச மட்ட குழுக்களை அமைப்பதன் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளதுடன் சமூர்த்தி திட்டம் ஊடாக சிறு தொழில் முயற்சியாளர்களுக்குரிய கடன்உதவி வழங்க பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஶ்ரீகாந்த், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.புண்ணியமூர்த்தி பிரதேச செயலாளர்கள் மற்றும், மாவட்ட விவசாய நீர்ப்பாசன கடற்றொழில் கமநல திணைக்கள உயர், அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் என பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.