
17 கோடி ரூபா பெறுமைதியான 8.5 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த நான்கு விமான பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று காலை இந்த நபர்களை கைது செய்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ஓமான் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இவர்களில் கொள்ளுப்பிட்டியை சேர்ந்த 25 வயதான இளம் தம்பதி மற்றும் 50 வயதான நபர் ஆகியோர் பொதிகளை எடுத்துச் செல்லும் தள்ளு வண்டியில் மிக சூட்சுமான முறையில் மறைத்து 7.5 கிலோ கிராம் எடை கொண்ட மூன்று தங்க தகடுகளை எடுத்து வந்துள்ளனர்.
50 வயதான நபரே தங்கத்தை தள்ளு வண்டிக்குள் சூட்டுசுமான முறையில் மறைத்து வைத்த நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை தவிர கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் தனது உடல் மற்றும் குத வழியில் மறைத்து எடுத்து வந்த சுமார் ஒரு கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கிறீன் சேனல் வழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.