ஒட்டுசுட்டானில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இயங்கிவரும் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பதாதைகளை தாங்கியவாறு தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
பின்தங்கிய மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் நிதி சுறண்டலில் இருந்து அரசியல் வளச்சுறண்டல்கள் இடம்பெற்று வருகின்றது.
இன்னிலையில் தமிழர்களுக்கான சரியான அரசியல் தீர்வினை தரவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கணபதி பிரசாந் கருத்து தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிலசுறண்டல் மற்றும் மத ஆக்கிரமிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இவற்றை தடுத்து நிறுத்தவேண்டுமாக இருந்தால் அரசியல் உரிமை முக்கியமாகும். அண்மை காலத்தில் எழுந்த பிரச்சினையான குருந்தூர் மலை பிரச்சினையை பார்த்தால் நீதிமன்ற உத்தரவினை மீறியும் அங்கு கட்டுமானங்கள் கட்டப்படுகின்றது. அதனை தடுப்பதற்கு யாரும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இவற்றை மாற்றி அமைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்கள் தங்களின் இருப்பினை நிலைநிறுத்திகொள்ள வேண்டுமாக இருந்தால் அரசியல் உரிமை என்பது காத்திரமான ஒன்று. இதனை வலியுறுத்தியே 100 நாள் செயல்முனைவின் 60 ஆவது நாளாக முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.