உலகில் பல பிரதான நாணயங்களின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கைக்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை தவிர ஏனைய பல நாடுகளின் பொருளாதாரம் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து ஏனைய நாடுகளின் நாணயங்கள் வீழ்ச்சியடைந்திருப்பது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமாக காணமுடியும். இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திற்கு இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். 2021 ஆம் ஆண்டு வரை எடுத்துக்கொண்டால், இலங்கையின் ஏற்றுமதியில் 25 வீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனிக்கு 6 வீதமும் இந்தியாவுக்கு 7 வீதமும், பிரித்தானியாவுக்கு 8 வீதமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு 18 வீதமும் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் காணப்பட்டது. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது இலங்கை போன்ற நாட்டுக்கு ஏற்றுமதியின் போது சாதகமானதாக இருக்கலாம்.
எமது பொருட்களுக்கான கேள்வியை அவர்கள் அதிகரிக்கலாம். கேள்வியை அதிகரித்தாலும் எம்மால் விநியோகத்தை அதிகரிக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. விநியோகத்தை அதிகரிக்க முடிந்தால், எம்மால் சாதகத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையானது இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை குறைக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் என நாம் எதிர்பார்த்தோம். எனினும் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார பின்னணி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணி குறையலாம். நாட்டுக்கு வரும் முதலீடு குறையலாம். இதனால், அமெரிக்காவை தவிர ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது தெளிவானது எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறியுள்ளார்.
அதேவேளை 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்ட்டின் ஆக குறைந்த மதிப்பு வீழ்ச்சி அண்மையில் பதிவாகியது. 24 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் பெறுமதி வீழ்ச்சியும் அண்மையில் பதிவாகியதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
இதனை தவிர அமெரிக்க டொலருக்கு நிகரான சீனாவின் யுவன் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. உக்ரைன் நெருக்கடி காரணமாக ரஷ்யாவின் ரூபிளின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.