
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (01.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா”, “எங்கள் உறவுகளுக்கு நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும்”, “இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்”, “5 வயது சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா”, “பாடசாலை சென்ற மாணவன் எங்கே” போன்ற பல்வேறு கோஷங்களைப் போராட்டக்காரர்கள் இதன்போது எழுப்பியுள்ளனர்.
மேலும், கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.