கிளிநொச்சி சேவை சந்தை இன்று மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்த செயற்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகின்றது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள கிளிநொச்சி சேவை சந்தையில் 500க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் அதி வேகமாக பரவி வரும் கொவிட் பரவல் காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கிளிநொச்சி சேவை சந்தையில் இடம்பெறாது என கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதற்கு அமைவாக இன்றைய தினம் சேவை சந்தையின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதேவேளை மீன் உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகினறமையை அவதானிக்க முடிகின்றது.
கிளிநொச்சி சேவை சந்தைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்காடி சேவையை பெற்றுக்கொள்கின்றனர். இந்த நிலையில் வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிற்கு கொவிட் பரவல் அதிகரித்தது.
இதேவேளை நாளாந்தம் நுாறு தொற்றாளர்களை கடந்த கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 257 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில் மக்கள் அதிகம் நெருங்கும் பகுதிகளை தவிர்க்கும் வகையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் கொவிட் பரவலின் அதிகரிப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், கூடுகைகள், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.