
காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (03.10.2022) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற கடற்தொழிலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவதினமான நேற்று இரவு தனது தோணியில் பாலமுனை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றவர் இன்று திங்கட்கிழமை காலைவரை கரைக்கு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரை கடலில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் தற்போது காலநிலை மாற்றத்தால் கடும் காற்று வீசிவருவதால் காலி தொடக்கம் அம்பாறை வரையும் கடற்தொழிலாளர்கள் செல்லவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.