பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து பாடசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம்!

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என வலியுறுத்தி பாடசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (03.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சிறுவர் தினத்திற்கு இணையாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் போதைப்பொருளை இல்லாதொழிக்க கோரியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் பல்வேறு வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு கோஷங்களை எழுப்பியவாறும் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளில் போதைப்பொருளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிநபர் ஒருவர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து 15 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனாலும் அவ்விடயம் தொடர்பில் உரிய நபர் கைது செய்யப்படவில்லை என்பதோடு உரிய நபரை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு அழுத்தங்கள் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாகவும் இதனை அடிப்படையாக வைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆசிரியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin