வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல், சிறியோர்களை நல்வழியில் வாழ வழிகாட்டுதல் ஆகிவை இவ் அவசர யுகத்தில் புறம்தள்ளப்பட்டுக் கொண்டே வருகின்றது.
இதனை உணர்ந்த இந்த நிறுவனமானது வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தினை பிரதான பகுதிகளாக கொண்டு அபிவிருத்தியில் பின்தங்கிய அதிகஷ்ட பிரதேச கிராமங்களான திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தின் நீனாக்கேணி கிராமத்திலும், மட்டக்களப்பின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா கிராமத்திலும், அம்பாறையின் திருகோயில் பிரதேசத்திலும், வவுனியாவின் ஒலுமடுவிலும், முல்லைத்தீவு விசுவமடுவிலும், மலையகத்திலும், இலவச கல்வி நிலையங்களை உருவாக்கி அங்கு வாழும் மக்களினதும் மாணவர்களினதும் நலன் கருதி இலவச மாலை நேர வகுப்புக்களையும், அறநெறி வகுப்புக்களையும் நடத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே நாட்டினுடைய அதிகஷ்ட பொருளாதார நிலையிலும் பொதுமக்களை உள்வாங்கி சிறுவர் மற்றும் முதியோர் தினத்தின் உள்ளார்ந்த பொருளை உணர்த்தும் வகையில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை குறித்த கல்வி நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடியுள்ளது.
அத்துடன் வீரம், செல்வம், கல்வியை வழங்குகின்ற முப்பெரும் தேவிகளை வழிபடும் விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதத்தினைச் சிறப்பிக்கும் முகமாக 10 தினங்களும் குறித்த கல்வி நிலையங்களில் பூசை வழிபாட்டு முறைகளை மேற்கொண்டதுடன் பல்வேறு கலாசார நிகழ்வுகளையும் நடத்தியுள்ளது.
குறிப்பாக இந்நிறுவனத்தினால் மாதம் தோறும் மேற்கொள்ளப்படும் மாணவர்களின் கல்வி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பரிசுப் பொருட்களாக வழங்கியதுடன் நவராத்திரி விரதத்தின் இறுதி மூன்று நாட்களும் தமிழ் கலாசாரத்தினை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் கோலம் போடுதல், மாலை கோர்த்தல், தேவார மனனம் செய்தல், தோரணம் இழைத்தல் போன்ற பல போட்டிகளை நடத்தியதுடன், கலை நிகழ்வுகளையும் நடத்தி குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்துள்ளது.