நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
பொருளாதார பிரச்சினை என்பது சாதாரண பிரச்சினை அல்ல. சிறு சிறு இறக்குமதிகளை நிறுத்தி பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் ஓரளவு அதிகரித்து இருந்தாலும் பொருட்களின் பெறுமதிக்கே அந்த வருமானம் கிடைத்துள்ளது.
மாறாக ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது சாதாரண ஒரு விடயமல்ல. நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர வேண்டுமாயின் முதலீட்டு நிறுவனங்களில் வருகை முக்கியமானது. எனினும், முதலீட்டு நிறுவனங்களுக்கு 17 வருட வரிவிலக்கு சலுகை வழங்குவதால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானமும் இல்லாம்ல போகும்.
முதலீட்டு நிறுவனங்களினூடாக மக்கள் நன்மையடையும் வேலைத்தட்டங்களை முன்மொழியுமாறே நாம் அரசாங்கத்தை கோருகின்றோம். புதிய முதலீட்டாளர்களை வரவழைத்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கமானது போராட்டக்காரர்களை கைதுசெய்வதையே பிரதான இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி நாம் கையெழுத்து பெறும் வேட்டையை ஆரம்பித்து இருந்தோம். எமது இந்த பயணத்தின்போது ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்கள் எதிர்கொண்டு இருந்த சவால்களை நாம் நேரடியாகவே கண்ணுற்றோம். நாட்டில் இன்று சகல தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.