இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாடி அது குறித்த ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. நேற்று முன்தினம் கலந்துரையாடலின் போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தின் போது, இந்த சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினமும் எதிர்வரும் 07 ஆம் திகதியும் நாடாளுமன்றில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது, தற்போதைய நிலையில், அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 30க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வர எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றில் முன்வைத்தால் அதற்கு நாடாளுமன்றில் சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெறாது என அவர்கள் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய செயற்பாடானது ஜனாதிபதிக்கும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சியின் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.