
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு உரித்துடையவர்கள் கட்டாயமாக சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், இலங்கை தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.