
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விபத்துக்கள் பதிவாகிவருகின்றது. இவ்வாறு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது நடந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் நேற்று (05.10.2022) நடந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (வயது 48) இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.