மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அவர்கள் மரணம் அடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன் பார்மக்யூட்டிக்கல்ஸால் (Maiden Pharmaceuticals) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், குழந்தைகளின் உயிரிழப்பிற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு கொடிய மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு மருத்துவ தயாரிப்புக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடுமையான சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு, 66 குழந்தைகள் உயிரிழந்ததற்கும், இந்த 4 மருந்தும் வழிவகை செய்யலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது.
அந்த நான்கு மருந்துகளும் இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்திடமும் மற்ற உயரதிகாரிகளுடனும் உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த மருந்து பொருட்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விளைவாக அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளை கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.