இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ்க் குழுக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே, அவர்களை அணுகி பேசுவதே முன்னோக்கி செல்லும் வழி என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்ன நடந்தாலும், வெளியில் இருக்கும் இலங்கையர்களை நாம் அணுக வேண்டும், இதுவே எங்களின் பிரச்சினை. எமது நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும்.
பல்லின, பன்முக கலாசார மற்றும் பல மொழி சமூகம் கொண்ட நாடு இதுவென்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம உரிமை உண்டு.
எனவே, அவர்களை அணுகி பேசுவதே முன்னோக்கி செல்லும் வழி. நாம் அவர்களை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.