பழி சுமத்த வேண்டாம்! உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை

2019 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தற்போது தம்மீது குற்றம் சுமத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச முன்கொணர்ந்த வரிக்கொள்கைகளின் போது கைகளை உயர்த்தியவர்கள் தற்போது தம்மை குற்றம் சுமத்துகின்றனர் என உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டியவிடம் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த செப்டெம்பரில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதியின் செயலாளர், நிதி செயலாளர் மற்றும் அமைச்சரவை உட்பட அப்போதைய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அதற்கான பழியை தாம் ஏற்க மறுப்பதாக உதயசிறி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்துக்கொண்டு தம்மீது குற்றம் சுமத்த வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், இன்னும் குறைந்த பட்சம் இந்த மட்டத்திலாவது வரித்துறை இயங்கி வருவதற்கு அதிகாரிகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் 2019 வரி சீர்திருத்தங்கள் காரணமாக 2020 இல் வரி வருமானம் 2019 உடன் ஒப்பிடும்போது 600 பில்லியன் ரூபாவினால் குறைந்தது. மேலும் 2021 இல், வருவாய் மேலும் 700 பில்லியன் ரூபாய் குறைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin