பொலிஸ் திணைக்களத்தின் வசமுள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ்மா அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரும், இளம் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்த்தன தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஊடாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வசம் உள்ள கண்ணீர் புகைக்குண்டுகளின் உற்பத்தி மற்றும் காலாவதி திகதி தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த மாத ஆரம்பத்தில் பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்ட போது இலங்கையின் சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அது தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபர் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதன் பிரகாரம் கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமான பொலிஸ் நடவடிக்கை தலைமையகத்தின் பணிப்பாளர், குறித்த தகவல்களை பத்து நாட்களுக்குள் வழங்குவதாக ஆணைக்குழு முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.
எனினும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான விசாரணை நடைபெற்ற பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளரான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் குறித்த தகவல்களை வழங்க பொலிஸ் மா அதிபர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் மாறுபட்ட கருத்துக்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தகவல் அறியும் ஆணைக்குழு, இது தொடர்பில் விரிவான விளக்கமொன்றை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.