1991ம் ஆண்டு தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சுமார் 31 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனடிப்படையில் இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணையில் மேற்படி பிரதான சந்தேகநபர் மேலும் சிலருடன் மதுபான விருந்து நடத்தியுள்ளதாகவும்,
அந்த விருந்தின் போது பாணந்துறை, பாப்புலர் மாவத்தை என்ற முகவரியில் வசிக்கும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
பின்னர் சடலம் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பே போல்கொட ஆற்றுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், இக்கொலையுடன் தொடர்புடைய மது விருந்தில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொல்லிகொட வாத்துவை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நேற்று (08) கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்