பிரேரணை தமிழ் மக்களுக்கு பாரிய அதிர்ப்தியையே கொடுத்திருக்கின்றது. உண்மையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஆணையாளரின் அறிக்கையும் போதியளவு பிரதிபலிக்கவில்லை. ஆணையாளர் அறிக்கையில் பிரதிபலித்தவை கூட பிரேரணையில் இருக்கவில்லை என்றே தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள். பொறுப்புக்கூறலில் உள்நாட்டுப் பொறிமுறைகள் எவற்றையும் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. சர்வதேச பொறிமுறையையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர். சுருக்கமாகக் கூறின் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் பொறுப்புக்கூறல் விவகாரம் செல்லவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களைக் கூட செய்யவில்லை என்ற கருத்தும் உண்டு. விசேட அறிக்கையாளரை நியமித்தல், சிரியா போன்ற விசேட பொறிமுறையை உருவாக்குதல் என்பவற்றில் கூட கவனம் செலுத்தவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு நீதியை வழங்க முற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறு நாடுகளுக்கு நாடு வேறுவேறு நீதியை வழங்கினால் சர்வசே நீதி ஒழுங்கினை எவ்வாறு பேணுவது என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் எவ்வளவு காலம் நீதிக்காகக் காத்திருப்பது என்கின்ற வினாவும் எழுந்துள்ளது? 46/1 தீர்மானம் கலப்பு நீதிப் பொறிமுறையையே சிபார்சு செய்திருந்தது. கடைசியாக வந்த ஆணையாளர் அறிக்கை சர்வதேச தரத்திற்கேற்ப நீதிப் பொறிமுறையை உருவாக்கி இலங்கை செயற்பட வேண்டும். இச் செயற்பாடு இடம்பெறாவிடின் உறுப்பு நாடுகள் சர்வதேச அணுகுமுறைகளை நோக்கி நகர வேண்டும் எனக் கூறியிருந்தது.
புதிய பிரேரணையில் இவை எதுவும் இல்லை. செயற்திறன் மிக்க பொறிமுறை ஒன்று தேவை என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான ஏற்பாடுகளும் ஏமாற்றங்களையே தந்துள்ளன. இதற்கு பிரேரணை 13வது திருத்தத்தையும், மாகாணசபைத் தேர்தல்களையுமே சிபார்சு செய்துள்ளது.
13வது திருத்தம் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் ஏற்கனவே பல தடவை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுருக்கமாகக் கூறின் பொறுப்புக்கூறலுக்கு உள்ளகப் பொறிமுறையும், நல்லிணக்கத்திற்கு 13வது திருத்தத்தையுமே பிரேரணை சிபார்சு செய்துள்ளது. இந்த சிபார்சுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமானதாக இல்லை. தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறு தேங்கி நிற்பதற்கு இந்தியாவின் அழுத்தங்களும் காரணங்களாக இருக்கலாம். பொறுப்புக்கூறல் தொடர்பாக இந்தியாவிற்கு எந்தவித அக்கறையும் கிடையாது. இது வலியுறுத்தப்படின் இந்தியாவும் மாட்டுப்படலாம் எனக் கருதியிருக்கலாம். பொறுப்புக்கூறலை இந்திய அமைதிப்படை காலம்வரை நீட்சியாக்கினால் இந்தியாவும் மாட்டுப்படுவது தவிர்க்கமுடியாதது.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் நிகழ்த்திய அட்டகாசங்கள் மறைக்கக்கூடியதல்ல. நோயாளர்கள், தாதிகள், மருத்துவர்கள் என எவரையும் அது விலக்காக்கவில்லை.
உண்மையில் தமிழர் விவகாரம் பிரேரணையில் கறிவேப்பிலை மாதிரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. வாசனைக்கு மட்டுமே தமிழர் விவகாரத்தை பிரேரணையில் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் வாசனைக்காவது சேர்ந்தார்கள் என திருப்திப்பட வேண்டியது தான். தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரேயொரு விடயம் சாட்சியங்களைச் சேகரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.
இதற்கு அனுமதி கிடைக்காது என்பது பிரேரணையை சமர்ப்பித்த நாடுகளுக்கு தெரியாததல்ல.
பொறுப்புக்கூறல் விவகாரமும், நல்லிணக்க விவகாரமும் இலங்கை அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்டவையாகும். அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாகவே அரசாங்கம் இருப்பதால் யார் ஆட்சிக்கு வந்தாலும் இவை இடம்பெறப்போவதில்லை.
அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ் அரசியல் பற்றிக் கூறும் போது “அதனை முழுமையான நிர்வாண நிலையில் பார்க்க வேண்டும். அதுவும் போதாதபோது ஸ்கான் பண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார். இதன் பின்னரும் போதிய உண்மைகள் வெளிப்படாவிட்டால் “மரபணு சோதனை செய்து பார்க்க வேண்டும்” என்றார்.
மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளைப் பார்ப்பதற்கும் இது பொருந்தக் கூடியது. மரபணுச் சோதனை இங்கு மிக மிக அவசியம். நோயை முழுமையாக அடையாளம் காணாமல் வலுவான மருத்துவத்தை மேற்கொள்ள முடியாது என்பதை இங்கு புரிந்துகொள்வது அவசியம். பிரேரணையின் நோக்கம் தலைப்பில் கூறப்பட்டது போல பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், மேம்படுத்துவதல்ல.
இவை வெறும் கவசங்கள் மட்டுமே! உண்மையான நோக்கம் சீனாவின் அதிகாரத்தை இலங்கையில் இருந்து அகற்றுவதுதான். இதற்கு முதல் நிபந்தனை ராஜபக்சாக்களை அரசியல் அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான். ராஜபக்சாக்களின் அதிகாரத்தை அகற்றினால் சீனாவின் அதிகாரம் தானாகவே பலமிழக்கும் என்பது தான் இதன் பின்னாலுள்ள தர்க்கம்.
ராஜபக்சாக்கள் நெருக்கடி வரும்போதெல்லாம் தஞ்சமடைவது பெரும் தேசியவாதத்திடம்தான். 2015ல் ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்ட போது மகிந்தர் தஞ்சமடைந்தது விகாரையில் தான். பின்னர் எழுச்சியடைந்ததும் பெரும் தேசியவாதத்தின் மூலம் தான். இந்தத் தடவை அவ்வாறு ஒளிந்துகொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என்பதில் மேற்குலகம் மிகக் கவனமாக இருக்கிறது.
ஒரு வகையில் கூறுவதானால் ராஜபக்சாக்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் எனலாம். போர்க்குற்றம், உயிர்த்த ஞாயிறு படுகொலைக் குற்றம், பொருளாதாரக் குற்றம், பொருளாதார மீறல் குற்றம் என நான்கு பெரும் குற்றங்களினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கள, தமிழ், முஸ்லீம் என அனைத்து மக்களினாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் என்றதோற்றம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னர் கூறியது போல பெரும் தேசியவாதத்திடம் சரணடையக் கூடாது என்பதற்காக மிகவும் முக்கிய விவகாரமான போர்க்குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொருளாதாரக் குற்றங்கள் பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ளன.
ரணிலின் மீது கற்கள் அதிகம் விழக்கூடாது என்பதற்காக ஜனநாயக மீறல் குற்றம் சற்று அடக்கி வாசிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களே முழுமையான காரணம் என்ற தோற்றம் காட்டப்படுகின்றது. இது பகுதி உண்மையே ஒழிய முழு உண்மையல்ல. பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் வரலாற்று ரீதியாக பின்பற்றப்பட்டுவரும் இன ஒடுக்குமுறைதான்.
இந்த ஒடுக்குமுறைக்கு இலங்கை அரசாங்கங்கள் பொறுப்பல்ல. இலங்கை அரசே பொறுப்பு, இரண்டாவது சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் இதற்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பாவர்.
மூன்றாவது கொரோனா பெரும் தொற்று, நான்காவது ரஸ்ய – உக்ரைன் யுத்தம். ராஜபக்சாக்கள் செய்தது எல்லாம் மந்தப் பொருளாதாரத்தை வங்குரோத்துப் பொருளாதாரம் என்ற நிலைக்கு உயர்த்தியமைதான் இங்கு குற்றவாளிகள் ராஜபக்சாக்கள் மட்டுமல்ல. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அனைவரும் தான்.
மையக் காரணியான இன ஒடுக்குமுறை இங்கு வேண்டுமென்றே தவிர்க்கப்படுகின்றது. இந்தத் தவிர்ப்பிற்கு இந்தியாவே பெரும் காரணியாக இருக்கலாம். மையக் காரணியை ஏற்றுக்கொண்டால் அதனையே முதன்மைப் படுத்தவேண்டும். அதனைத் தீர்ப்பதற்கே சிபார்சுகளில் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். இது விடயத்தில் சந்திரிகாவிற்கு வந்த ஞானம் கூட இவர்களுக்கு வரவில்லை. “தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால்தான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு அணைவரும் ஓரணியில், ஒரே திசையில் பயணிக்க முடியும். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சிங்களவர்கள் ஒரு திசையிலும் தமிழ் – முஸ்லீம் மக்கள் வேறொரு திசையிலும் பயணித்துக்கொண்டே இருப்பர். இது மக்களுக்கும் அழகல்ல. நாட்டிற்கும் நன்மையல்ல என சந்திரிகா கூறியிருக்கிறார்.
பிரேரணையில் பாதகமான விடயங்களே தமிழ் மக்களுக்கு அதிகம். தென்னிலங்கை விவகாரங்கள் பெருப்பித்துக் காட்டப்பட்டு தமிழ் மக்களின் விவகாரங்கள் சிறுப்பிக்கப்பட்டது முதலாவது பாதிப்பு, இரண்டாவது பாதிப்பு இன அழிப்பு விவகாரம் மனிதஉரிமை விவகாரமாக கீழிறக்கப்பட்டமையாகும். இவற்றினூடாக இனப்பிரச்சினை ஒன்று இல்லை. மனித உரிமைப்பிரச்சினையும், ஜனநாயக மீறல் பிரச்சினையும் மட்டுமே உள்ளன என்ற தோற்றம் காண்பிக்கப்படுகின்றது.
மறுபக்கத்தில் தங்களது பிடி நீண்டகாலத்திற்கு தேவை என மேற்குலகம் கருதுகின்றது. வெளிநாட்டமைச்சர் அலிஸ்சப்ரி இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். “நீண்டகாலத்திற்கு இலங்கையை தமது நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்க மேற்குலகம் விரும்புகின்றது” என அவர் கூறியிருக்கின்றார்.
போர்க்குற்ற விவகாரக் கோவையை முழுமையாக மூடாமல் வைத்திருப்பதற்கும் இதுவே காரணமாகும்.
இந்நிலை சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களின் விவகாரத்தை எப்பொழுதும் பேசுபொருளாக வைத்திருக்கும்.
கோவையை மூடாமல் வைத்திருத்தல் என்ற மேற்குலகத்தின் பலவீனத்தை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி யோசிப்பதே நல்லது.
தமிழ் மக்கள் தொடர்ந்து கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.