பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நகர சபை தலைவர் நந்தன குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார். டயர்களை வைத்து விறகுகளால் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தகனம் செய்வதற்காகத் தற்காலிகமாக தகனச்சாலைகளை வெளியே அமைப்பதற்கான திட்டங்கள் இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள் அதற்காக அதிக பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை நகர எல்லையில் ஒரே ஒரு தகனச்சாலை இருப்பதால், ஒரு நாளில் அதிகபட்சம் மூன்று சடலங்களை மாத்திரம் தான் எரிக்கலாம் என்பதால் கோரகான, மொறட்டுவ, வாதுவ உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள தகனச்சாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளாந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் தகனச்சாலையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை வைத்தியசாலை பிணவறைக்கு 37 சடலங்கள் மாத்திரம் தான் கொள்ளளவு திறன் இருந்தாலும், தற்போது 50க்கு மேற்பட்ட கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் இருப்பதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.