முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சுருக்கு வலைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்கள் ஆயின் மாவட்டம் தழுவிய போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம் என யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா எச்சரிக்கை விடுத்துள்ளா்.
இன்று திங்கட்கிழமை மாவட்ட கட தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இடம் பெற்ற முல்லைத் தீவு மீனவர்களின் சட்டவிரோத சுருக்கு வலை தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்.
கடந்த 3 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத சுருக்கு வலைக்கு எதிராக 26 மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தை மூன்று நாட்களாக முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் அவர்களுடைய போராட்டம் கடந்த ஆறாம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சட்டவிரோத சுருக்கு வலை இலங்கையில் தடை செய்யப்பட்ட தொழிலாக காணப்படுகின்ற நிலையில் அதிகாரிகள் சட்ட திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்தினால் மீனவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவையில்லை.
சட்ட விரோத தொழிலுக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் நடத்தும் போது சிலர் அதனை சட்டரீதியான அங்கீகாரம் கேட்டு போராடும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டமை வருத்தத்துக்குரிய விடயமாகும்.
1996 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க கடத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம் 1995 இரண்டாம் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி 457/46 மற்றும் 1987 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி என்பன சுருக்கு வலை சம்பந்தமான ஒழுங்கு விதிகளைத் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது.
சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் எதிரானவர்களோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ நாங்கள் வரவில்லை.
சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை 10 கடல் மையில் தொலைவுக்கு அப்பால் சுருக்குவலையை பாவிக்க வேண்டும்.
ஆனால் முல்லைத்தீவில் உள்ள சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் சட்ட திட்டங்களை மதிக்காது தாங்கள் நினைத்தபடி கடலை கையாளுகின்றனர்.
அது மட்டுமல்லாது சுருக்கு வலையைக் கொண்டு செல்வதற்கு ஒரு படகு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு அனுமதிக்கப்பட்ட 12 மீன் இனங்களைத் தவிர வேறு இனங்களை பிடிக்க முடியாத என பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் நடைமுறைகள் இருக்கும் சம்பந்தர்பங்களில் சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளை மீறி முல்லைத்தீவில் ஒரு பகுதியினர் சுருக்குவலைத் தொழிலில் ஈடுபாடுவதை ஏன் அதிகாரிகளால் தடுக்க முடியாதுள்ளது .
இன் நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் துறைசார்ந்த அமைச்சர் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவ சங்கங்களை சந்தித்து தீர்வு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பில் சுருக்கு வலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி மீனவர்களின் ஜனநாயக போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடற் தொழில் அமைச்சு சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் சுருக்கு வலைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாது மீனவர்ளுக்கு பாதகமான அல்லது ஏற்க முடியாத தீர்வு வழங்கப்படுமாயின் மீனவ அமைப்புகள் வடமகாணம் தழுவிய போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.