தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சி அதனை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது.
எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்தல், தவிசாளர்களின் அதிகாரங்களை குறைத்தல் என்பவற்றுக்கான சட்டமூலங்களை முன்வைக்கப்போவதாக அரசாங்கம் தற்போது கூறத் தொடங்கியுள்ளது.
அந்த விடயங்கள் நல்லதுதான் ஆனால் அதனை சாட்டாக வைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மறுபுறத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டம் கொண்டுவரப் போவதாகவும் அதனை உரிய காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தும் அப்படியானதே.
நாடாளுமன்றத் தேர்தலை தற்போதைக்கு நடத்துவதை ஒத்திப் போடுவதே அதன் மறைமுக நோக்கமாகும். இந்த அரசாங்கத்துக்கு உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்தேர்தல்களை நடத்த அச்சமாக இருந்தால் நேரடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும்.
அப்போது மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பது தெரிய வரும். தற்போதைய ஆட்சி ஒரு முறையற்ற ஆட்சியாகும். பொதுமக்களின் ஆணை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது.
எனவே உடனடியாகத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல்களை ஒத்திப் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை முறியடிக்கும் வகையில் பொதுமக்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கிப் போராடி தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்