உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் உலக வர்த்தக நிலையம் உட்பட 4 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக இன்று காலை உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இன்று காலை அவர் சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
250 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை திலினி பிரியமாலி அழைத்துச் செல்லப்பட்ட போது அவரின் கைவிலங்குகள் கழற்றப்பட்டிருந்தன. கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள திலினியின் அலுவலகத்தை சோதனையிடும் நோக்கில் அழைத்துச் செல்லப்பட்ட போதே அவரது கைவிலங்குகள் கழற்றப்பட்டிருந்தன.
பொதுவாக விளக்கமறியல் கைதியொருவரை பொது இடங்களுக்கோ அல்லது விசாரணைகளுக்கோ அழைத்துச் செல்லும் போது கைவிலங்கு இடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.